×

ஆசிரியர் தகுதி தேர்விற்கு ஆக.28 முதல் இலவச பயிற்சி வகுப்பு

சிவகங்கை, ஆக. 26: ஆசிரியர் தகுதி தேர்விற்கு (டிஇடி) இலவச பயிற்சி வகுப்புகள் ஆக.28 முதல் தொடங்க உள்ளது. சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் சார்பில் வரும் டிசம்பர் மாதத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுகள் தாள் 1 மற்றும் தாள் 2 நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் சிவகங்கை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகில் உள்ள படிப்பு வட்டத்தில் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. ஆசிரியர் தகுதி தேர்விற்கு இலவச அறிமுக பயிற்சி வகுப்பு தன்னார்வ பயிலும் வட்ட பயிற்சி மையத்தில் ஆக.28 காலை, 11 மணிக்கு நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் சம்பந்தப்பட்ட பாடப் பிரிவுகளில் அனுபவமிக்கவர்களும், போட்டித் தேர்வுகளுக்கு ஏற்கனவே பயிற்சி அளித்துள்ள வல்லுநர்களும் பயிற்சி அளிக்க உள்ளனர்.

பயிற்சி வகுப்புகளின் போது பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும். போட்டித்தேர்வுகளில் பங்கேற்பவர்கள் பயன்பெறும் வகையில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக தொடங்கப்பட்டுள்ள www.tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களது பெயரினை கட்டணமில்லாமல் பதிவு செய்து, ஒன்றிய, மாநில அரசுகளால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகள், வினாவிடைகள் மற்றும் புத்தகங்கள் ஆகியவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம். இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள https://bit.ly/svgtetclass என்ற வலைதளத்தில் பூர்த்தி செய்து சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும். அல்லது நேரில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆசிரியர் தகுதி தேர்விற்கு ஆக.28 முதல் இலவச பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivagangai… ,Dinakaran ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி...